குருவை நீங்கள் தேர்ந்தெடுக்காதீர்கள , அவர் உங்களை தேர்ந்தெடுக்கட்டும். எல்லாருக்கும் நன்றி.......!!!
Thursday, September 24, 2009
அலெக்சாண்டர் கிரகாம் பெல்
தொலைபேசியைக் கண்டுபிடித்த அலெக்சாண்டர் கிரகாம் பெல், ஸ்காட்லாந்திலுள்ள எடின்பரோவில் 1847 ஆம் ஆண்டில் பிறந்தார். இவர் சில ஆண்டுகளுக்கு மட்டுமே முறையான பள்ளிக் கல்வி கற்றபோதிலும், இவருடைய குடும்பத்தினர் இவருக்குச் சிறந்த கல்வி கற்பித்தனர். இவர் தாமாகவும் உயர்ந்த கல்வி கற்றுக் கொண்டார். இவருடைய தந்தை, குரல் உறுப்புப் பயிற்சியிலும், பேச்சுத் திருத்த முறையிலும், செவிடர்களுக்கு கல்வி கற்பிப்பதிலும் ஒரு வல்லுநராகத் திகழ்ந்தார். எனவே, குரல் ஒலிகளை மீண்டும் உருவாக்கிக் காட்டுவதில் இவருக்கு இயல்பாகவே ஆர்வம் எழுந்தது.அமெரிக்காவிலுள்ள மாசாசூசெட்ஸ் மாநிலத்திலிருக்கும் பாஸ்டன் நகரில் 1871 ஆம் ஆண்டில் பெல் குடியேறினார். அங்குதான் 1875 ஆம் ஆண்டில், தொலைபேசியைக் கண்டு பிடிப்பதற்கு வழி வகுத்த கண்டுபிடிப்புகளை இவர் செய்தார். இவர் தமது கண்டுபிடிப்புக்காக 1876 ஆம் ஆண்டு பிப்பரவரி7 மாதத்தில் புத்தாக்க உரிமைக்காக விண்ணப்பித்தார். சில வாரங்களுக்குப் பிறகு இந்த உரிமை இவருக்கு வழங்கப்பட்டது. (பெல் தமது விண்ணப்பத்தை அளித்த அதே நாளன்று ஆனால் சில மணி நேரம் பிந்தி, எலிஷாகிரே என்பவர், அதே போன்ற சாதனத்திற்காகப் புத்தாக்க உரிமை கோரி ஒரு விண்ணப்பத்தை அளித்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.)பெல்லுக்கு புத்தாக்க உரிமை வழங்கப்பட்ட பின்பு மிக விரைவிலேயே அவர் ஃபிலெடெல்ஃபியாவில் நடைபெற்ற நூற்றாண்டு விழாக் கண்காட்சியில் தொலைபேசியைக் காட்சிக்கு வைத்தார். அவரது கண்டுபிடிப்பில் பொது மக்கள் பேரார்வம் கொண்டனர். இவரது கண்டுபிடிப்புக்கு ஒரு பரிசும் கிடைத்தது. எனினும், இந்தக் கண்டுபிடிப்புக்கான உரிமைகளை 1,00,000 டாலருக்கு "வெஸ்டர்ன் யூனியன் டெலிகிராஃப் கம்பெனி" என்ற நிறுவனத்திற்கு வழங்க பெல் முன் வந்தபோது, அதை வாங்கிக் கொள்ள அந்த நிறுவனம் மறுத்துவிட்டது. அதனால், பெல்லும் அவரது நண்பர்களும் சேர்ந்து 1877 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் தங்களடைய சொந்த நிறுவனத்தை நிறுவினார்கள். இந்த நிறுவனம்தான் இன்றைய "அமெரிக்கன் டெலிபோன் மற்றும் டெலிகிராஃப் கம்பெனி" யின் மூதாதையாகும். இவருடைய தொலைபேசிக்கு உடனடியாகப் பெருமளவில் வாணிக முறையில் வெற்றி கிட்டியது. இவர் நிறுவிய நிறுவனம் இன்று உலகிலேயே மிகப் பெரிய தனியார் வாணிக நிறுவனமாகத் திகழ்கிறது.பெல்லும், அவரது மனைவியும் 1876 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் இந்தத் தொலைபேசி நிறுவனத்தின் சுமார் 15 விழுக்காட்டு பங்குகளைச் சொந்தமாகக் கொட்ருந்தனர். ஆனால், தங்களது நிறுவனம் எத்தனை பேரளவுக்குத் ஆதாயம் ஈட்டியது என்பதை அவர்கள் அப்போது அறிந்திருக்கவில்லை. சில மாதங்களிலேயே அவர்கள் இந்த நிறுவனத்தின் பெரும்பாலான பங்குகளைச் சராசரி ஒரு பங்கு 250 டாலர் என்ற விலையில் விற்று விட்டனர். நவம்பர் மாதத்திற்குள் இந் நிறுவனத்தின் பங்குகள் ஒரு பங்குக்கு 1000 டாலர் என்ற விலைக்கு உயர்ந்தது. (இதற்கு எட்டு மாதங்களுக்கு முன்பு இந்த நிறுவனத்தின் பங்கு ஒன்று 65 டாலர் என்ற விலையில் விற்பனையாகிக் கொண்டிருந்தபோது, அந்தப் பங்கின் விலை அதற்குமேல் ஏறாது எனக் கருதிய பெல்லின் மனைவி, அந்தப் பங்குகளை உடனடியாக விற்றுவிடும்படி கணவரை வலியுறுத்தினார்). அவர்கள் 1881 ஆம் ஆண்டில், தங்களிடமிருந்த பங்குகளில் மூன்றில் ஒரு பகுதியை விவேகமின்றி மீண்டும் விற்றுவிட்டனர். எனினும் 1883 ஆம் ஆண்டில் அவர்கள் சுமார் 10,00,000 டாலர் செல்வ மதிப்புடையவர்களாக இருந்தார்கள்.தொலைபேசியைக் கண்டுபிடித்ததன் காரணமாக பெல் ஒரு பணக்காரராக ஆனபோதிலும் அவர் தமது ஆராய்ச்சிகளைக் கைவிட்டுவிடவில்லை. வேறுபல பயனுள்ள சாதனங்களையும் அவர் கண்டுபிடித்தார். அவர் பல துறைகளில் ஈடுபாடு கொண்டிருந்தார். ஆயினும், காது கேளாதவர்களுக்கு உதவி புரிவதில்தான் அவர் முக்கியமாக ஆர்வம் காட்டினார். இவருடைய மனைவிகூட ஒரு செவிட்டுப் பெண்தான். அவருக்குப் பெல்தான் கல்வி கற்பித்தார். அவர்களுக்கு இரு புதல்வர்களும், இரு புதல்விகளும் பிறந்தனர். ஆனால் இரு புதல்வர்களும் குழந்தைப் பருவத்திலேயே இறந்து விட்டனர். 1882 ஆம் ஆண்டில் பெல் அமெரிக்கக் குடிமகன் ஆனார். 1922 ஆம் ஆண்டில் அவர் காலமானார்.தொலைபேசிக்கு நாம் அளிக்கும் முக்கியத்துவத்தைப் பொறுத்துத்தான் பெல்லின் செல்வாக்குப் பற்றிய எந்த ஒரு மதிப்பீடும் அமையும். என்னுடைய கருத்தில், தொலை பேசியைப் போன்று வேறெந்தக் கண்டுபிடிப்பும் மிகப் பரந்த அளவில் பயன்பட்டதில்லை. வேறு எந்தச் சாதனமும் தொலைபேசியைப் போல் நமது எந்தச் சாதனமும் தொலைபேசியைப் போல் நமது அன்றாட வாழ்வில் பெருத்த பாதிப்பை ஏற்படுத்தியதில்லை. எனவே, பெல்லின் செல்வாக்கு மிகப் பெரிது எனக் கருதுகிறேன்.தொலைபேசியைவிட வானொலி பல திறப் பயன் பாடுடையதாக விளங்குவதால், வானொலியைக் கண்டுபிடித்த மார்கோனிக்கு அடுத்தப்படியாக பெல்லுக்கு இடமளித்திருக்கிறேன். தொலைபேசி வாயிலாக நடத்தப்படும் ஓர் உரையாடலைக் கொள்கையளவில் வானொலி வாயிலாகவும் நடத்தலாம். ஆனால் வானில் பறக்கும் விமானத்துடன் தகவல் தொடர்பு கொள்ளுதல் போன்ற பல நேர்வுகளில் வானொலி பயன்படுகின்ற அளவுக்குத் தொலைபேசி பயன்படாது. இந்த ஒரு காரணத்தால் மட்டுமே மார்கோனியை விட மிகத் தாழ்வான இடத்தைப் பெல்லுக்கு அளிக்கலாம். ஆனால், வேறு இரு அம்சங்களையும் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும். முதலாவதாக ஒரு தனித் தொலைபேசி உரையாடலை வானொலி வாயிலாக நடத்த முடியும். ஆனால் தொலைபேசி அமைப்பு முறை முழுவதற்கும் பதிலாக அதே போன்ற சரிநிகரான வானொலிச் செய்தித் தொடர்பு இணைவனம் ஒன்றை ஏற்படுத்துவது மிகக் கடினம். இரண்டாவதாக, தொலைபேசி ஒலிவாங்கிக் (Receiver) கருவிக்காக பெல் வகுத்தமைத்த அடிப்படை ஒலி உருவாக்க முறையைப் பின்னர் வானொலி ஒலிவாங்கி, இசைத் தட்டு இயக்கக் கருவி போன்ற பல்வேறு சாதனங்களை கண்டுபிடித்தவர்கள் பொருத்தமாக மாற்றியமைத்துப் பயன்படுத்திக் கொண்டார்கள். எனவே, அலெக்சாண்டர் கிரகாம்பெல், மார்கோனியைவிட மிகக் குறைந்த அளவுதான் செல்வாக்கில் குறைந்தவர் என நான் கருதுகிறேன்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment