Tuesday, September 15, 2009

சார்லஸ் பாபாஜ் (1792 - 1871)

சார்லஸ் பாபாஜ் (1792 - 1871)இக்காலத்தில் மிகப் பெரிய மின்னியல் கணிப்பு எந்திரங்கள் ( Electronic calculating machines) கண்டுபிடிக்கப்படுவதற்கு ஒரு நூற்றாண்டுக்கு முன்னரே பொதுநோக்கக் கணிப்பொறியின் (Computer) தத்துவங்களைப் கண்டுவிடித்தவர் ஆங்கிலேயப் புத்தமைப்பாளரான சார்லஸ் பாபாஜ் (Charles Babbage) ஆவார். இவர் தாம் வடிவமைத்த ஒரு பொறிக்கு ''பகுப்பாய்வுப் பொறி" (Analytical engine) என்று பெயரிட்டழைத்தார். இது இன்றைய கணிக்கும் எந்திரங்கள் செய்யக் கூடிய அனைத்தையும் கொள்கையளவில் செய்வதற்கு ஆற்றலுடையதாக இருந்தது. ஆனால், பகுப்பாய்வுப் பொறி, மின்விசையால் இயங்கவில்லையாதலால், அத்துணை விரைவாக இயங்கவில்லை. தீவினைப் பயனாக, 19 ஆம் நூற்றாண்டுத் தொழில் நுட்பம் போதிய அளவுக்கு முன்னேற்றமடையாமல் இருந்ததால், பாபாஜ் ஏராளமான பணத்தையும் காலத்தையும் செலவிட்ட போதிலும், இப்பகுப்பாய்வு பொறியை அவரால் முழுமையாகத் தயாரிக்க முடியவில்லை. அவருடைய மரணத்திற்குப் பிறகு அவரது அற்புதமான புதுப் புனைவுத்திறன் வாய்ந்த கொள்கைகள் பெரும்பாலும் மறக்கப்பட்டுவிட்டன.எனினும் 1937 ஆம் ஆண்டில் ஹார்வர்டுப் பல்கலைக் கழகப் பட்டப்படிப்பு மாணவராகிய ஹோவர்டு எச். அய்க்கன் (Howerd H. Aiken) என்பவரின் கவனத்தை பாபாஜின் எழுத்துகள் கவர்ந்தன. அய்க்கன் ஒரு கணிப்பு எந்திரத்தை வடிவமைக்க முயன்று கொண்டிருந்தார். எனவே அவருக்கு பாபாஜின் கருத்துகள் பெருந்தூண்டுதலாக அமைந்தன. ஐ,பி.எம் (IBM) கூட்டுறவுடன் முதலாவது பெரிய பொது நோக்கக் கணிப்பொறியாகிய மார்க்-1 (MarK-1) அய்க்கன் உருவாக்கினார். மார்க் -1 செயற்படித் தொடங்கிய ஈராண்டுகளுக்கு பிறகு 1946 ஆம் ஆண்டில் பொறியியல் வல்லுநர்களும், புத்தமைப்பாளர்களும் அடங்கிய மற்றொரு குழுவினர், ''ஈனியாக்" (Eniac) என்ற முதலாவது மின்னியல் கணிப்பு எந்திரத்தைத் தயாரித்தனர். அது முதற்கொண்டு கணிப்பொறித் தொழில் நுட்பத்தில் அசுர வேகத்தில் முன்னேற்றங்கள் ஏற்பட்டு வந்துள்ளன.கணிப்பு எந்திரங்கள் உலகின் மீது ஏற்கெனவே மிகப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கின்றன. அவை எதிர்காலத்தில் இன்னும் அதிக முக்கியத்துவத்தைப் பெறக்கூடும். இந்நூலின் மூலப்பகுதியில் சார்லஸ் பாபாஜை சேர்க்க வேண்டும் என்ற எண்ணங்கூட எனக்குத் தோன்றியது. ஆயினும், கவனமாகச் சிந்தித்த பிறகு அய்க்கனையோ ''ஈனியாக்'' கணிப்பு எந்திரத்தை வடிவமைப்பதில் பெரும்பங்கு கொண்ட ஜான் மாக்லி, ஜே.பி. எக்கர்ட் ஆகியோரைவிட கணிதப் பொறிகள் தயாரிப்பதில் பாபாஜ் கணிசமான அளவுக்கு அதிமாக எதுவும் செய்து விடவில்லை என்ற முடிவுக்கு வந்தேன். அந்த வகையில், பாபாஜிக்கு முற்போந்த குறைந்தது மூன்று விஞ்ஞானிகளின் - பிளேஸ் பாஸ்கல், காட்ஃபீரிட் லைப்னிஸ், ஜோசஃப் மேரி ஜேக்கார்டு ஆகிய மூவரின் - பணிகளை பாபாஜின் பணிக்கு இணையான முக்கியத்துவம் வாய்ந்தனவாகக் கூறலாம். புகழ் பெற்ற ஃபிரெஞ்சு விஞ்ஞானியும், கணித மேதையும் தத்துவஞானியுமாகிய பாஸ்கல், 1642 ஆம் ஆண்டிலேயே எந்திர முறைக் கூட்டல் பொறியை (Machanical adding machine) கண்டுபிடித்திருந்தார். தத்துவஞானியும் கணிதமேதையுமான காட்ஃபரீட் வான் லைப்னிஸ், கூட்டல் கழித்தல், பெருக்கல், வகுத்தல் ஆகியவற்றைச் செய்யக்கூடிய ஓர் எந்திரத்தை வடிவமைத்ததார். இக் காலத்துக் கணிப்பு எந்திரங்களில் வெகுவாகக் கையாளப்படும் ஓர் எண்மான முறையின் (Sytem of Notation) ஈரிலக்க எண்மான முறையின் (Binary system) முக்கியத்துவத்தை முதன் முதலில் விளக்கிக் கூறியவரும் லைப்னிசேயாவார். 19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வாழ்ந்த ஜேக்கார்டு ஒரு ஃபிரெஞ்சு அறிஞர்.
அவர் ஒரு தறியின் இயக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்குத் துளையிட்ட அட்டைகளைப் பயன்படுத்தும் சாதனம் ஒன்றைக் கண்டுபிடித்தார். ஜேக்கார்டின் தறி வாணிக முறையில் மிகவும் வெற்றியாக அமைந்தது. அவருடைய இந்தத் தறி, பாபாஜின் சிந்தனையில் வெகுவாகச் செல்வாக்குப் பெற்றது. 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் மக்கள் தொகைக் கணிப்பு அட்டவணைகளில் பயன்படுத்தப்படுவதற்காக, துளையிட்ட அட்டைகளைக் கையாண்ட ஹெர்மன் ஹோலரித் (Herman Hlollerith) என்ற அமெரிக்கரிடமும் இந்தப் பொறி செல்வாக்குக் கொண்டிருக்க வேண்டும்.
எனவே, நவீன கணிப் பொறியைக் கண்டுபிடித்த முக்கிய பெருமையை மேற்சொன்ன பல்வேறு அறிஞர்களுக்கும் சரி சமமாகப் பகிர்ந்தளிக்க வேண்டியுள்ளது. அவர்கள் ஒவ்வொருவருமே சரிநிகராகத் தொண்டு புரிந்திருக்கிறார்கள். எந்த ஒருவருடைய பணியும் மற்றவர்களுடையதைவிட மேம்பட்டது என திட்டமாகக் கூறுவதற்கில்லை. எனவே, பாபாஜோ அல்லது மற்றவர்களில் எவருமோ, இந்நூலின் மூலப் பகுதியில் இடம் பெறும் அளவுக்குத் தகுதியுடையவர்களாகத் தோன்றவில்லை.
நன்றி : உதயன்

No comments: