Saturday, September 26, 2009

அசோகர் (கி.மு. 300-கி.மு.232)

இந்திய வரலாற்றில் மிகப் பெரும் புகழ் வாய்ந்த அரசராக விளங்கியவர் அசோகர். இவர் மௌரிய மன்னர் மரபில் மூன்றாவது அரசர். மௌரியப் பேரரசை நிறுவிய சந்திரகுப்த மௌரியரின் பேரன். சந்திரகுப்தர் இந்திய இராணுவத் தலைவராக விளங்கினார். அவா மகா அலெக்சாந்தரின் இந்தியப் படை எடுப்பிற்குப் பிறகு, வட இநதியாவின் பெரும் பகுதியை வென்று அதன் மூலம் இந்திய வரலாற்றிலேயே ஒரு பெரும் பேரரசை முதன் முதலில் நிறுவினார்.அசோகர் பிறந்த ஆண்டு தெரியவில்லை. பெரும்பாலும் கி.மு.300 ஆண்டு வாக்கில் அவர் பிறந்திருக்கலாம். கி.மு.273 ஆம் ஆண்டில் அசோகர் அரியணை ஏறினார். முதலில் தன் பாட்டனாரின் அடியொற்றி தம் ஆட்சி எல்லைகளை இராணுவ நடவடிக்கை மூலம் விரிவுபடுத்த விழைந்தார். அவரது ஆட்சியின் எட்டாம் ஆண்டில் இந்தியாவின் கிழக்குக் கடற்கரையில் அமைந்திருந்த கலிங்க நாட்டின் (இன்றைய ஒரிசா மாநிலம்) மீது போர் தொடுத்து வெற்றி கண்டார். ஆனால் தமது வெற்றியின் பின்னணியில் மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை எண்ணித் தாங்கொணாணுத் துயருற்றார். கலிங்கப் போரில் ஒரு இலட்சம் பேர் இறந்தனர். அதற்கும் அதிகமானோர் காயமுற்றனர். இதனால், அதிர்ச்சியும் கடுங்கழுவிரக்கமும் கொண்ட அசோகர் இந்தியா முழுவதையும் வெற்றி கொள்ள வேண்டும் என்ற தம் எண்ணத்தைக் கைவிட்டார். மாறாக, எல்லா வகை ஆக்கிரமிப்பிப் போர்களையும் அறவே ஒழித்துவிட உறுதிபூண்டார். அவர் புத்த சமயத்தைத் தமது சமயக் கொள்கையாக ஏற்றுக் கொண்டார். வாய்மை. கருணை. அகிம்சை ஆகிய அறநெறிகளைத் தம் வாழ்வில் கடைப்பிடிக்க முயன்றார்.
அசோகர் தம் சொந்த வாழ்க்கையில் வேட்டையாடுவதைக் கைவிட்டார். புலால் உண்ணாமையைப் பின்பற்றினார். பல்வேறு மனிதாபிமான அரசியல் கொள்கைகளை அவர் செயற்படுத்தியது மிக முக்கியமானதாகும். அவர் மருத்துவமனைகளையும், விலங்குகளுக்குப் புகலிடங்களையும் நிறுவினார்; கொடுமையான சட்டங்களைச் சீர்படுத்தினார்; சாலைகளை அமைத்தார்; நீர்ப்பாசன வசதிகளைப் பெருக்கினார்; மக்களிடையே பக்தியுணர்வை வளர்க்கவும், நட்புறவை ஊக்குவிக்கவும், "தருமாதிகாரிகள்" என்ற சிறப்பு அரசு அலுவலர்களை நியமித்தார். அவரது ஆட்சியில் எல்லாச் சமயங்களும் மதிக்கப்பட்டன. ஆனால் அசோகர் குறிப்பாகப் புத்த சமயத்துக்கு ஊக்கமளித்தார். அதனால் புத்த சமயம் மக்ளிடைய அதிகமாகச் செல்வாக்கு பெற்றது. புத்த சமயப் பிரச்சாரகர்களைப் பல அயல்நாடுகளுக்கு அனுப்பினார். அவற்றுள் முக்கியமாக இலங்கை சென்ற குழு பெருமளவில் வெற்றிகரமாகப் பணிபுரிந்தது.அசோகர் தமது நீண்ட ஆட்சிக் காலத்தின்போது, தமது வாழ்க்கை நிகழ்ச்சிகளையும், கொள்கைகளையும பாறைகளிலும், துர்பிகளிலும் பொறிக்கும்படி செய்தார். இந்த நினைவுச் சின்னங்களில் பல இன்றும் நிலைத்திருக்கின்றன. இந்தச் சின்னங்கள் விரிவான நிலப்பபகுதிகளில் காணப்படுவதால் அவை அசோகப் பேரரசின் ஆட்சிப் பரப்பின் அளவை அறிவதற்கு ஆதாரங்களாக விளங்குகின்றன. இவற்றில் பொறிக்கப்பட்டுள்ள வாசகங்கள், அவரது கொள்கைகளை அறிவதற்கு முக்கிய் அகச் சான்றுகளாகும். இந்தத் துர்பிகள் அவர் காலத்திய சிறந்த கலை வேலைப்பாடுகளுக்கு எடுத்துக்காட்டுகளாகவும் விளங்குகின்றன.அசோகரின் இறப்பிற்குப் பிறகு 50 ஆண்டுகளுக்குள் மௌரியப் பேரரசு சிதறுற்றது. அதன் பின்பு அது எழுச்சி பெறவே இல்லை. ஆனாலும், அசோகர் புத்த சமயத்திற்கு ஆதரவளித்ததன் மூலம் உலகத்தின் மீது அவர் பெற்ற நீண்ட காலச் செல்வாக்கு மிகப் பெரியதாகும். அவர் ஆட்சி பீடம் ஏறியபோது புத்தச் சமய்ம் வட இந்தியாவில் ஒரு குறுகிய வட்டாரத்திலேயே செல்வாக்குப் பெற்றிருந்தது. அவா இறக்கும்போது இந்தியா முழுவதும் அது பரவியிருந்ததோடு இந்தியாவின் அண்டை நாடுகளிலும் மிக விரைவாகப் பரவி வந்தது. கௌதம புத்தர் நீங்கலாக புத்த சமயம் ஓர் உலகப் பெரும் சமயமாக வளர்வதற்கு வேறெவரையும் விட முக்கிய காரணமாக இருந்தவர் அசோகரேயாவார்.

No comments: